கண் தெரியாத இசைஞன்
பிறப்பிலேயே கண்தெரியாத அவனது சூழலின் அனைத்து திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து வந்து அவனின் காதுகளை நிறைக்கும் ஓசைத் திரள்களினூடே மிதந்து வந்தது அந்த குழலிசை...... கற்றறியாத நாட்டுப்புறத்தான் ஒருவனின் சுய துயரத்திலிருந்து, அவனது ஆன்மாவின் தாகமாய், நாணல்தட்டை குழலிலிருந்து முகிழ்த்த தூய இசை.........
மாலை வேளைகளில் அச்சிறுவனுக்குள் நிரம்பித் த்தும்பும் அந்தப் பிசிரற்றலயம் அவனை இசையின் திசையில் செலுத்துகிறது. அவனின் அம்மா, கண்தெரியாத அந்தச் சிறுவனுக்கு, நிறங்களையும் ஒளிகளையும் பியானோவில் இசைத்து உணர்வின் அலைகளாக்கித் தருகிறாள்.
ஏரிநீர் சிற்றலையோசை, கிளைகளை அளையும் காற்றோசை, விடியல் பறவைகளின் சப்தம், பண்ணை விவசாயிகளின் குரல்கள்.....
இவற்றுடன் அவனது அழுகை, ஆற்றாமை, நேசம், கடுமை, பயம் யாவற்றையும்-பியானோவில் தத்தும் அவன் விரல்கள் இசைகளாக்குகின்றன.
இசையாகும் அவனது மகிழ்வும் துயரமும் இருளுக்குள் மலரும் நிறங்களாகிச் சொரிகின்றன.