குட்டி ரேவதியின் பெரும்பான்மையான கதைகள் காமத்தை மையமாகக் கொண்டவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம். தன்னை இயற்கையின் கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற பாலியல் வேட்கையை, விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளே இந்தத் தொகுப்பு முழுதும் நிறைந்திருக்கின்றன.