டிசம்பர் 2ஆம் தேதி நாங்கள் நீரால் முற்றுகையிடப்பட்டோம்.ஒரே இரவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீர் அகதிகளாக மாறினார்கள்.மக்கள் புகலிடம் தேடி ஓடிக்கொண்டே இருந்தார்கள்.குடியிருப்புகளுக்குள் இரண்டு மாடி உயரத்திற்கு நிரம்பிய தண்ணீரைக் கண்டு ஏராளமானோர் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள்.
நகரம் முழுக்க பிசாசுகளைப்போல அழிவின் கதைகள் எங்கெங்கும் உலவத்தொடங்கின.தண்ணீருக்கு அடியில் இருந்து பிணங்கள் வருவதுபோல எண்ணற்ற கதைகள் மேலே வரத்தொடங்கின.அவை நாம் அதுவரை கற்பனை செய்திராத மனித அவலத்தின் கதைகள்,கைவிடப்பட்டவர்களின் கதைகள்,தண்ணீரில் கரைந்தவர்களின் கதைகள்,எல்லாவற்றையும் இழந்தவர்களின் கதைகள்,அவமானத்தில் குன்றிப்போனவர்களின் கதைகள்.சொல்லவந்து வார்த்தை இல்லாமல் தொண்டையிலேயே நின்றுவிட்ட கதைகள்.அந்தக் கதைகள்தான் இந்தத் தொகுப்பின் 52 கவிதைகளிலும் சிதறிக் கிடக்கின்றன.
இந்தக் கவிதைகள் சென்னை நகரத்தின் கூட்டு மனதின் சொற்கள்.