குழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவத்திற்குத் திரும்பும் எத்தனிப்போடு படைக்கப்பட்ட படைப்புகளே காலத்தால் அழியா படைப்புகளாக இருக்கின்றன.
மு.முருகேஷ் குழந்தைகளுக்குக் கதை சொல்வதின்மூலம் தன் குழந்தைப்பருவத்திற்குத் திரும்புவதற்கு முயற்சிக்கிறார். குழந்தைகளுக்காக கதைகளைச் சொல்லும்பொழுதும் எழுதும்பொழுதும் கதையைத் தொடங்கிவிட்டு கதாசிரியன் காணாமல் போக வேண்டும்.கதையை கேட்கும், படிக்கும் ஒவ்வொரு குழ்ந்தையும் தனக்கான கதையை உருவாக்கிக் கொள்ளும். அந்த விரிந்த தளத்தை உள்ளடக்கியவையே மு.முருகேஷின் குழந்தைக் கதைகள்.