’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை.
இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும்
விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது
வார்த்தைகளும், கதையின் மாந்தர்களும் உலகைப் பழிவாங்கத் துடிக்கும்
நீதியின் முதற்குழந்தைகள். கைவிடப்பட்டும், கொல்லப்பட்டும் அநீதியான
முறையில் நிர்வாணமாக்கப்பட்ட நந்திக்கடல் மனிதர்களே இந்த நூற்றாண்டைக்
கைப்பற்றியிருக்கிறார்கள். இனிவருகிற எல்லா நூற்றாண்டிலும் நீதியின்
பிராணவாயுவாக தமிழீழர்களே எழுச்சி கொள்ளப்போகிறார்கள். அவர்களின்
இலக்கியங்களே உலகைப் பேரலையாகத் தாக்கப் போகிறது. அந்தப்
பேரலையின் ரகசியச் சுழிப்பும், அதிர்வுமே எனது கதைகள்.
***
அகரமுதல்வன்
சுந்தரலிங்கம் அகரமுதல்வன் தமிழீழத்தின் வடபகுதியில் உள்ள ‘பளை’ எனும்
ஊரில் 1992ல் பிறந்தார். ‘தொடரும் நினைவுகள்’, ‘அத்தருணத்தில் பகை
வீழத்தி’, ‘அறம் வெல்லும் அஞ்சற்க’, ‘டாங்கிகளில் சரியும் முல்லை நிலா’
ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. இணையத்தில்
கலை, இலக்கியம், அரசியல் தொடர்பான கட்டுரைகளை எழுதிக்
கொண்டிருக்கும் இவர், நிகழ்த்துக் கலைக் கலைஞன் ஆவார். இவரது
‘அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ கவிதைத் தொகுப்பு ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய
விருது’ மற்றும் ‘கலகம் விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இவர் பத்து
ஆளுமைகளுடன் நடத்திய நேர்காணல் தொகுப்பான ‘நன்றேது? தீதேது?’
வெகுவாகக் கவனிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘இரண்டாம் லெப்ரினன்ட்’, ‘முஸ்தபாவைச் சுட்டுக்-கொன்ற ஓரிரவு’ என்கிற
சிறுகதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளிவரும் சிறுகதைத்
தொகுப்பே ‘பான் கீ மூனின் றுவாண்டா.’ சென்னை புத்தகத் திருவிழா - 2017ம்
ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதினை இவரின்
‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ சிறுகதைத் தொகுப்பு பெற்றது
குறிப்பிடத்தக்கது.