பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
1940கள் அளவில் தமிழ்ச் சமூகத்தில்உருப்பெற்றுவந்த பொதுக்களத்தில் (public sphere) பாரதியின் எழுத்துக்கள் இன்றியமையாததும் தவிர்க்க முடியாததுமான ஓர் இடத்தைப் பெற்று விட்டன. பாரதியின் எழுத்துகளுக்கு வணிக மதிப் பும் ஏற்பட்டது. அவனுடைய பாடல்களைப் பயன் படுத்திக்கொள்வதற்குப் ‘பாரதி பிரசுராலயம்’ கட்டணம் விதித்ததே இதற்குப் போதிய சான்றாகும். ‘விண்ணப்பதாரரின் தன்மையைப் பொறுத்து, பாரதி பாடல்களின் சிலவரிகளையும், சில செய்யுட்களையும் பாடநூல்களில் பயன்படுத்திக்கொள்வதற்குச் சில சமயங்களில் கட்டண மில்லாமலும் சில சமயங்களில் பெயரளவுக்கு ராயல்டி விகிதப்படியும் அனுமதியளித்து வந்ததாக’க் கூறிய பாரதி பிரசுராலயம், இந்தியப் பணியாளர் சங்கம் போன்ற பொதுநல அமைப்புகள்தாமே பாரதியின் தேர்ந்தெடுத்த பாடல்களின் தொகுப்புகளையும் வெளியிட அனுமதி அளித்தது. பொதுச் சொல்லாடல்களில் பெருகிவந்த பாரதி பாடல்களின் பயன்பாட்டுத் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பது வெளிப்படை.