நீலகண்டனின் ‘சௌத் வெஸ் நார்த்’ (South Vs North) என்னும் இந்தப் புத்தகம் மூன்று முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. முதல் பகுதியில், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் முதலிய தளங்களில் இந்திய மாநிலங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை, அரசின் புள்ளிவிவரங்கள் வழியே எடுத்துச் சொல்கிறார். இத்தளங்களில், தென்னிந்திய மாநிலங்கள் ஏன் முன்னணியில் உள்ளன என்பதற்கான காரணிகளையும் விவரிக்கிறார். இரண்டாவது பகுதியில், தற்போதைய அரசியல், நிதி நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள போதாமைகளை விவரிக்கிறார். மூன்றாவதாக, இந்தப் போதாமைகளைப் போக்கி, செயல்திறன் மிக்க வகையில் மக்களின் நேரடியான பங்கேற்பு ஜனநாயக முறையைத் தீர்வாக முன்வைக்கிறார்.
சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரக் குறியீடுகளில், தென் மாநிலங்கள் மேம்பட்டிருப்பது கடந்த 25 ஆண்டுகளில் நாம் கண்டுவரும் நிகழ்வு. இது யதேச்சையானது அல்ல. மிகத் தெளிவான மக்கள் நலக் கொள்கைகள், கல்விக் கட்டமைப்பு, மருத்துவக் கல்வி, மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு, சத்துணவு, கர்ப்பிணிப் பெண்கள் திட்டம் என ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையே இதற்குக் காரணம் என்பதற்கான தரவுகளை ஆற்றொழுக்கான முறையில் எழுதிச் செல்கிறார்.
இந்தத் தரவுகளினூடே, இந்தியத் திட்டக்குழுக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும், ‘பொருளாதார வளர்ச்சியே மக்கள் மேம்பாட்டை உறுதிசெய்யும்’ என்னும் கருதுகோளின் அடிப்படைகளை அசைக்கிறார். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் தனிநபர் வருமானம் மிக அதிகமாக உள்ள ஹரியானா, குஜராத் மாநிலங்களின் குழந்தைகள் இறப்பு சதவீதம் பல ஏழை மாநிலங்களைவிட அதிகம் என்பதைச் சுட்டுகிறார். மக்கள் நல மேம்பாட்டில் அரசு கவனம் கொள்ளாமல் இருந்தால், பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும், மக்கள் நலக் குறியீடுகள் மேம்படாது. எனவே, மாநில அரசுகள், முனைப்புடன் மக்கள் நலக் கொள்கைகள், அவற்றுக்கான கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு முதலியவற்றை உருவாக்க வேண்டும் என்பதை தரவுகள் வழியே நாம் அறிகிறோம்.