குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.