கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள சோ. தர்மனின் புனைகதைகள் சித்திரிக்கிற கரிசலை மையமிட்ட கதையாடல்கள், அறத்திற்கு எதிரானவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களைக் கிராமத்தினரின் பேச்சுகளில், நாட்டார் கதைமரபில் சொல்கிறது. கதைசொல்லியான தர்மன் எந்த இடத்திலும் தனது அபிப்ராயத்தை முன்வைக்காமல் விலகி நிற்கிறார். முடிவற்ற கதைகளின் மூலம் உயிர்த்திருக்கிற கிராமத்தினரின் வாழ்க்கையில் அறமற்றவை நிச்சயம் அழியும் என்ற நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரமா என்ற கேள்வி சோ. தர்மனின் படைப்புகளில் துல்லியமாக வெளிப்படுகிறது. சூழல் சார்ந்து செழித்தோங்கிய கரிசல் நிலவெளி யானது அரசியல் மாற்றத்தினால் சிதைவடைந்தபோது கிராமத்தினர் அடைந்த துயரங்களைப் பதிவாக்கியுள்ளது சோ.தர்மனின் புனைவுலகு. ஒருபோதும் முடிவற்ற கதைகளின் உலகில் தனக்கான முத்திரையைப் பதிப்பதில் சோ.தர்மன் தனித்து விளங்குகிறார். -
ந. முருகேசபாண்டியன்