கோபி கதைகளின் பலமே கேலி, கிண்டல், நக்கல், பகடிதான். எந்தவொரு விஷயமும் விவரிக்கப்படும் முறையினால் முக்கியமானதாகிறது. கிராமத்துச் சாவடிக்கு முன்னர் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர்க்கதை பேசிடும் மனிதர்களின் விட்டேத்தியான மனநிலை கோபியிடம் தோய்ந்துள்ளது. கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு அற்றவர்; திடுக்கிடும் சம்பவங்களை வெறுத்து ஒதுக்குபவர்; போலியாக மனநிறைவு தரும் சுப முடிவுகள் குறித்து அக்கறையற்றவர்; மயிர் பிளக்கும் விவாதங்கள், செறிந்த மொழிநடையைப் புறக்கணிப்பவர். எல்லாவற்றையும்விடப் பொதுவாகக் கதைகளை முடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. இது கதைக்கான தளமாக முடியுமா என்று முதல் வாசிப்பில் தோன்றும் பல சம்பவங்கள் விவரிக்கப்படு்ம் முறை காரணமாகவே நேர்த்தியான கதைகளாக வடிவெடுத்துள்ளன. மாபெரும் சாதனையாளர்கள், வீரர்கள், வெற்றியாளர்களைக் குறித்துக் கோபிக்குச் சிறிதும் ஆர்வமில்லை. சாதாரண ஜந்துகளாய் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதப் பூச்சிகளின் உலகிற்குள் நுழைந்து பார்த்துப் புதிய அம்சங்களை வெளிப்படுத்துவதில் கோபியின் கதைசொல்லல், நுட்பமான தளங்களில் பயணபபடுகிறது.
No product review yet. Be the first to review this product.