என் சிறு வயதில் எங்களூரில்
ஓர் ஏழை முஸ்லீம் குடும்பம் இருந்தது. அவர்கள் பெட்டிக்கடை வைத்திருந்தார்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா எனும் சிறுவன் எங்களோடு படித்தான். எனக்கு அறிமுகமான முதல் முஸ்லீம் குடும்பம் அவனுடையதுதான். ஓரிரு வருடங்களிலேயே அவர்கள் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள்.
பிறகு, கோடை நாட்களில்,
எங்களூருக்கு ஷாஜகானும் மும்தாஜும்
ரெகார்ட் டான்ஸ் ஆட வருவார்கள்.
திரௌபதி அம்மன்னுக்கு காப்பு கட்டி
கூத்து போடுவார்கள். கண்டபங்குரிச்சி சும்சுதீன் என்கிற முஸ்லீம்தான் அர்ஜூனன் வேடம் போடுவார். ஆறாவது படித்தபோது எனக்கு தலைமையாசிரியர் ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து வந்த அப்துல்ரஹ்மான் சார்.
இவர்கள்தாம் இளம்பிராயத்தில் எனக்கு அறிமுகமாயிருந்த இசுலாமியர்கள்.
இன்றுபோல் மதபேதம் இல்லாத காலமது.
எங்கள் திருமண வீடுகளில், எம்ஜியார்
'மேரா நாம் அப்துல் ரஹ்மான்' பாடினார்.
அய்யனார் வீதி உலா வந்தார்.
ரேடியோ செட்டுக்காரர் சிவாஜி ரசிகர். சம்மந்தமே இல்லைதான். ஆனாலும் 'எல்லோரும்கொண்டாடுவோம்,
அல்லாவின் பேரை சொல்லி'
பாட்டை போட்டார். எங்களுக்கு
அது ஒரு பாட்டு. 'நூறு வகை பறவை
வரும் , கோடி வகை பூ மலரும்,
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா'
இதன் அர்த்தம் புரியாமல் ரசித்தோம்.
அஞ்சலை வயசுக்கு வந்தாள்.
'வானுக்கு தந்தை எவனோ'
கமலஹாசன் தப்பு அடித்து பாடினார்.
கூட சேர்ந்து ஸ்ரீபிரியா, 'லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி' பாடினார்.
அஞ்சலை கண்களும் பாட்டு பாடியது.
நாங்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக இல்லாமல், இந்தியர்களாக, தமிழர்களாக வாழ்ந்த காலமது. அந்தக் காலத்தை மீட்டெடுக்கும் ஒரு கனவுதான்,
'வளர்பிறை காலம்'.
- கரிகாலன்