வீமநாயகி ராமநாதபுரத்தில் சகோதரர்கள் சூழ்ந்த ஒரு பெருந்தனக்காரர் குடும்பத்தில் பிறந்தவள் என்பதோ, உறவுகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒர் ஓடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன் காதலனோடு பெருங் கனவுகளைச் சுமந்துகொண்டு தப்பி வந்து, வனமாகக் கிடந்த அந்த இடத்தில் ஒழிந்து வாழ்ந்தவள் என்பதோ பலருக்குத் தெரியாது. அவளின் இருப்பிடம் தேடி வந்த சகோதரர்கள், வீமநாயகியையும், அவளின் காதலனையும் வெட்டி வீழ்த்திய இடம்தான் வீமதேவிக்கு எதிரிலிருக்கும் திடல் என்பதையும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரில் இருக்கும் மூப்பாள் ராமாயிக்கிழவிக்கு மட்டும் அந்தத் திடலைப் பார்க்கும்போது கண் கலங்கும்.
ராமாயிக்கிழவி ஒருநாள் மாலை, படுகளமான அந்தத் திடலில் என்னை அமர்த்தி வீமநாயகியின் கதையைச் சொல்லிமுடித்தாள்.
வீமாயியைப் போல நாட்டார் வழிபாட்டில் நாம் வணங்குகிற பல பெண் தெய்வங்கள், வஞ்சிக்கப்பட்டவர்களாக, கொலை செய்யப்பட்டவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். காதல், நட்பு, வறுமை, அச்சுறுத்தல் என ஒவ்வொரு தெய்வத்தின் கதையிலும் ஒரு வன்முறை புதைந்திருக்கிறது. கொல்லப்பட்ட பெண்களின் மீதான அச்சத்திலிருந்துதான் வழிபாடு பிறந்திருக்கிறது. உயிரென நேசித்த கூத்துக்கலையில் இருந்து விலக்கப்பட்டதால் கூத்து நடந்த இடத்திலேயே தற்கொலை செய்துகொண்ட பெண், சாதியைச் சொல்லி ஊரார் பிரிக்க முயல, தன் தோழியின் கைபற்றியபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டவள், அரச வன்முறைக்கு அஞ்சி பெற்றோராலேயே கொலை செய்யப்பட்ட பெண் என ஒவ்வொரு கதையும் அதிர்ச்சியும் துயரமும் படிந்ததாகவே இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.