ரகுநாதன் திருநெல்வேலியில் 1923, அக்டோபர் 21ல் பிறந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும், பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிகையிலும் பணியாற்றினார்.
இவரது முதல் புதினமான ‘புயல்’ 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் சோசலிச எதார்த்தவாத நாவலான ‘பஞ்சும் பசியும்’ என்ற புதினத்தை வெளியிட்டார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையாகின. அதே ஆண்டு தனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார். 1954-56 வரை தான் நடத்திவந்த ‘சாந்தி’ என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 1960ல் ‘சோவியத் நாடு’ பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கது: மக்சீம் கார்க்கியின் ‘தாய்’ நாவலாகும். அவரது இலக்கிய விமர்சன நூலான ‘பாரதி-காலமும் கருத்தும்’ 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான இவர், 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டதோடு, 1951ல் அவரது வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.
No product review yet. Be the first to review this product.