சென்ற நூற்றாண்டின் மத்திமத்தில் சென்னைக்கு அப்பாலிருந்த ஒரு குக்கிராமமே குன்றுமேடு, ஆலந்தூர், பரங்கிமலை எனச் சுட்டப்பெற்றுள்ள ஒன்றிரண்டு அருகாமை ஊர் பெயர்கள் இப்பகுதியை அறியும் அடையாளங்களாகின்றன. இதையொத்து அதன் சமகாலத்தை நினைவூட்டும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் மட்டுமே நாவலில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வட்டாரத்தையோ, வரலாற்றுத் தன்மையையோ நாவலின் மீது சுமத்திவிடக்கூடாது என்பது நாவலாசிரியரின் கவனங்களில் ஒன்றாகத் தெரிகிறது. இன்று விரிந்து பெருகிய சென்னையின் வளர்ந்தோங்கிய கட்டடங்களின் கீழ் கற்பனைக்கே எட்டாதவாறு அவ்வூரும் அதன் வாழ்வும் புதைந்துபோய்விட்டது என்ற அறிதல் நாவலின் இருப்பை ஆழப்படுத்துகிறது. தன் இளமையில் பெற்றிருந்த அனுபவங்களை ஞாபகங்களிலிருந்து மீட்டுத் தனக்குகந்த படைப்பாகப் புனைந்திருப்பதில் ஒரு வெற்றிபெற்ற நாவலாசிரியராகியுள்ளார் கண்ணன். கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஐம்பது வயதைக் கடந்த எவ்வொருவரும் தம் அனுபவத்தின் ஏதேனும் ஒரு நினைவையோ; ஒரு நிகழ்வையோ; ஒரு நபரையோ இந்நாவலில் சந்திக்கக்கூடும். கேலியாகச் சுட்டப்படும் பட்டப்பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் நிரம்பிய இந்நாவலை வாசிக்கையில் இணையாகச் சரசரவென தம்மூர்வாசிகளின் பட்டப்பெயர்கள் நினைவுக்கு வரும் அனுபவம் பலருக்கும் நேரலாம். குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் நாவலில் முக்கியத்துவம் பெற்றுள்ள பெண்பாத்திரங்கள், புதுமைப்பித்தனின் துன்ப வதைப்பட்ட மருதிகளாகவும் தெளிவு கண்ட அம்மாளுகளாகவும் வாசகனின் நினைவில் நிலைத்திருப்பர். வாசிப்பில் வாழ்வியலை முதன்மையாகக் கொள்வோர் இதை ஒரு "சிறந்த தலித் நாவல்" என்று போற்றவும், கோட்பாட்டரசியலை வலியுறுத்துபவர்கள் “தலித் எதிர் நாவல்" என்று விமர்சிக்கவும் கூடும். நான், இந்நாவலை தமிழ் நாவல் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் முழுத்தகுதியுடைய ஒன்றாகக் கருதுகிறேன்.
ஸ்ரீநேசன்
No product review yet. Be the first to review this product.