கலையையே தனிப்பெரும் அறமாகவும், அது வெளிப்படும் ஊடகமாகக் கலைஞனையும் பார்த்த விமர்சகர்களில் சி.மோகன் குறிப்பிடத்தகுந்தவர். வாழ்க்கையின் அடிப்படைகளை, மெய்மையை, மொழிவழி விசாரிக்கும் இலக்கியத்தோடு பிற கலை வடிவங்களான நவீன ஓவியம், சினிமா போன்றவற்றையும் சேர்த்துக் காண்பதற்கும் ரசிப்பதற்கும் ஒரு தலைமுறை தமிழ் வாசகர்களைத் தூண்டிய எழுத்துகள் இவருடையவை. நாவல் என்பது நீளமான கதை என்ற எண்ணமே சிறு வட்டமாக இருந்த நவீன வாசகர்களிடமும் நிலைபெற்றிருந்த சூழலில், தத்துவத்தோடு புனைவு மேற்கொண்டிருந்த துண்டிப்பைச் சரிசெய்யும் ஊடகம் நாவல் என்ற வாதத்தின் மூலமாக, நாவல் என்னும் தனிப்பெரும் வடிவத்தைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்தவர். சினிமா போல, சிம்பனி இசை வடிவம்போல தனிக் கலைவடிவம் நாவல் என்கிறார். இலக்கிய விமர்சகர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், சிறந்த புத்தக வடிவமைப்பாளர், செம்மையாக்குநர், சிறுகதையாளர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல முகங்களையும் கொண்டவர். கலையின் அடிப்படைப் பண்பான எதிர்ப்பு மனோபாவத்துடன் தனித்தும் பசித்தும் விழித்தும் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தின் மதிப்பீட்டுத் தொடர்ச்சி சி.மோகன். எந்தக் கலை நம்பிக்கையின் காரணமாகத் தமிழின் நவீன இலக்கிய ஆசான்களில் ஒருவராக உருவாகியிருக்கிறாரோ, அந்த நம்பிக்கையின் தீர்க்கதரிசனமாகவும் அவரது இருப்பு அமைந்திருக்கிறது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
- யூமா வாசுகி
No product review yet. Be the first to review this product.