சாதிச் சமுதாயத்தில் மானம் என்பது ஒருவருக்குள்ள சுயமரியாதை, சுயநம்பிக்கை தொடர்பானதல்ல. மாறாக, நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல. ஒருவருக்குப் பிறர்காட்டும் மரியாதையும், அவர் மீது பிறர் கொண்டுள்ள பயபக்தியும்தான் ஒருவரது தன்மானத்துக்கான உள்ளீட்டை வழங்குகின்றன. வேறெந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாவிடினும் அதாவது, பொருளாதார ரீதியாகவோ அதிகாரத்தை முன் வைத்தோ ஒருவரால் ஆதிக்கம் செலுத்த முடியாவிடினும், 'மான'த்தின் பொருட்டு ஒருவர் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அவருக்குப் பெருமை சேர்ப்பனவாய் அமைந்துவிடுகின்றன. இந்த 'மானம்' என்பது பெண்களின் நடத்தையைப் பொறுத்துள்ளதால், இந்நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிட்ட சாதியின் அந்தஸ்தை, இருப்பைச் சோதிப்பதாகக் கொள்ளப்படுகின்றன.
இதனால்தான் பெண்கள் காதலிப்பதையும் காதல் திருமணம் செய்துகொள்வதையும் சாதிச் சமுதாயம் விரும்புவதில்லை. பெண்கள் தம்சாதி ஆண்களைத் தேர்ந்தெடுக்காமல் பிறசாதி ஆண்களைத் தேர்ந் தெடுத்துவிட்டால் அவர்கள் சார்ந்திருக்கும் சாதிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று சாதிச் சமுதாயம் இன்றளவும் நம்புகிறது.
No product review yet. Be the first to review this product.