பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்கள், யூதர்களின் மதத்தையும் கடவுளையும் நமக்கு விரிவாக அறிமுகம் செய்கின்றன. யூதர்களின் கடவுள் அவர்களுக்கு மட்டுமேயான கடவுள் என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கிமு 586-ல் பாபிலோனிய அரசன் நெபுகத்நெசர் யூதர்களின் எருசலேம் ஆலயத்தைத் தாக்கி அழித்து, யூதர்களை அடிமைப்படுத்துகிறான். அன்று தொடங்கி யூதர்கள் மாறிமாறி, கிரேக்கர்கள், ஹாஸ்மோனியர்கள், ரோமானியர்கள் என்று யாரோ ஒருவரிடம் அடிமைகளாக இருந்துவந்தனர். மீண்டும் தங்களுக்கான தனி நாட்டைச் சுதந்தரமாக ஆள விரும்பிய அவர்கள், அரசியல் விடுதலையைத் தங்களுக்கு தரக்கூடிய ஒரு மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ந்நிலையில் யூதக் குடும்பம் ஒன்றில் கிமு 4-ல் இயேசு பிறக்கிறார். அவருடைய போதனைகள் யூதர்களை நோக்கி மட்டுமே இருக்கிறது. தன் சீடர்கள் அனைவரும் யூதர்கள் மத்தியில் மட்டுமே பிரசாரம் செய்யவேண்டும், புறஜாதியாரிடம் ஒருபோதும் செல்லக்கூடாது என்று இயேசு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர். ஆனால் ஒரு மெசியா என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லியுள்ளதோ அவற்றைச் செய்வதற்கு முன்னதாகவே இயேசு கொல்லப்படுகிறார்.
இயேசுவின் நேரடிச் சீடராக இருந்திராத பவுல் என்ற யூதர், இயேசுவைப் பின்பற்றுவோரைக் கடுமையாகத் துன்புறுத்துகிறார். பின்னர் மனம் மாறுகிறார். பவுல்தான் இயேசு என்ற ஒரு மெசியாவை, கிறிஸ்து எனப்படும் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்ற நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு கூறியதற்கு மாற்றாக, புறஜாதியாரிடம் இயேசு கிறிஸ்து என்ற கருத்தாக்கத்தைக் கொண்டுசெல்கிறார். பவுலுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையில் நிறையக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இன்று பவுலின் கிறிஸ்தவமே உலகம் முழுதும் பரவியுள்ளது.
செண்பகப்பெருமாளின் இந்நூல் பைபிளின் பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, யூத வரலாற்றையும் இயேசுவின் வாழ்க்கையையும் ஆராய்கிறது. அதன்மூலம் இன்றைய கிறிஸ்தவத்தின் பல கொள்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.