நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் முடிவுப் பகுதியை சுவாரஸ்யமாக எழுதும் போட்டியை அறிவித்து, சாமான்ய வாசகர்களுக்குள் மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலைத் தூண்டிவிட்டுள்ளது விகடன். திருக்குறள் கதைகள், பொன்மொழிக் கதைகள், நவரசக் கதைகள், தூண்டில் கதைகள், புதிய ஆத்திசூடிக் கதைகள், மகாகவி பாரதியின் வரிகளைக் கருப்பொருளாக வைத்து பாரதி கதைகள் எனப் பலவிதமான தலைப்புகளில், பல்வேறு சுவைகளில் சிறுகதைகளை வெளியிட்டு, வாசகர்களிடம் சிறுகதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாளில், பக்க எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு கதைக்கான சன்மானத்தைத் தீர்மானிப்பதே வழக்கம். இதை மாற்றி, கதையின் தரத்தை அளவுகோலாக வைத்து சன்மானம் அளிக்கும் முறையை விகடனில் கொண்டுவந்தார் அதிபர் எஸ்.எஸ்.வாசன். கூடவே, சிறுகதை உலகுக்கு ஒரு புரட்சித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளில் பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட கதைகளிலிருந்து மிகச்சிறந்த கதையை ‘முத்திரைக் கதை’ என்னும் அறிமுகத்தோடு, அதிக சன்மானம் அளித்து, ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியிட்டார். இப்படித் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, 300 சிறுகதைகளுக்கும் மேல் ‘முத்திரைக் கதை’களாக வெளியாகின. சிறுகதை மன்னன் என்று போற்றப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் பல இப்படி ‘முத்திரைக் கதை’கள் என்று மகுடம் சூட்டப்பட்டு, விகடனில் வெளியாகி, எழுத்துலகில் ஒரு புகழ் வெளிச்சத்தை அவர் மீது பாய்ச்சியதை சிறுகதை ஆர்வலர்கள் நன்கறிவார்கள். அப்படி அந்நாளில் ஆனந்த விகடனில் ‘முத்திரைக் கதை’ என்னும் சிறப்பு முத்திரையோடு வெளியாகி, வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளிலிருந்து 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு தொகுப்பாக வழங்குகிறது விகடன் பிரசுரம். முத்து, பவழம், வைரம் எனப் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களையும் கற்களையும் கொண்டு தொடுக்கப்பட்ட அபூர்வமான நவரத்தின மாலையைப் போன்றது இந்தப் புத்தகம் என்பதை, இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் படிக்கும்போதும் உங்களால் உணர முடியும். நல்ல படைப்புகள் எங்கிருந்தாலும் நாடிச் சென்று படித்து இன்புறும் வாசகர்கள் அத்தனை பேரும் இந்த அரிய தொகுப்பையும் போற்றிக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.