விதைசார் அரசிலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்:
ஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க சொல்லிக் கொடுத்தார்கள்! அதன்பிறகு, “இந்த ராட்டைகளை நிறைய செய்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நூல் நூற்கலாம். நாமே பஞ்சை விளைய வைப்போம். நாமே நெய்வோம். நாமே அவைகளை உடுத்திக்கொள்வோம்” என தேசத்துக்குச் சொன்னார் காந்தி.
அப்படியானால், நம்மிடம் ‘விதைகள்’ உள்ளன. நம்முடைய விதைகளை நிலத்தில் விதைத்தால் நம்முடைய நிலத்தில் விளையும். நாமே அதை அறுத்துக்கொள்ளலாம். எவருக்கும் கடன்பட வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேலைவாய்ப்பும், தேவையான அளவு உணவும் கிடைக்கும். காந்தி ராட்டையை ஆயுதமாகக் கொண்டு சுதந்திரம் வாங்கினார். நாம் விதைகளை ஆயுதமாக வைத்து நம்முடைய சுதந்திரத்தை காத்துக்கொள்ள இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த நெல்திருவிழா!
– நம்மாழ்வார்
விதைகளும் தண்ணீரும்தான் இன்று உலக அரசியலை நிலைநிறுத்துபவைகளாக மாறியிருக்கின்றன. இத்தனை போர்கள், இயற்கைசீற்றங்கள் அனைத்துக்கும் அப்பாலும் நம் சமூகம் கொஞ்சம் விதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், அது பரவலாக்கப்பட வேண்டும், அதுவே காலத்தேவை. வரலாற்றில் எப்போதுமே பெண்கள்தான் விதைகளைச் சுமந்து தலைமுறை தலைமுறையாக காத்துவருகிறார்கள்.
அவ்வகை செயலதிர்வின் நீட்சியாக, திருவண்ணமாலை சுற்றுப்புற விவசாயப் பெண்களின் கைகளுக்கு விதைநெல்லை ஒப்படைத்து, நம்மாழ்வார் அய்யா பேசிய அகமுறையும் உரையின் எழுத்துவடிவப் புத்தகமே ‘விதைவழி செல்க’. திருவண்ணமலை டேனிஷ் மிஷன் பள்ளியில், நிகழ்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ‘நெல்திருவிழாவில்’ அய்யா நம்மாழ்வார் ஆற்றிய பேச்சின் எழுத்தாக்கமான இப்புத்தகம், தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு அடைகிறது. விதைகளை தக்கவைக்கப் போராடும் ஒரு குடிமைச்சமூகத்தின் கருத்துக்கு வலுசேர்க்கும் நூலிது.
No product review yet. Be the first to review this product.