ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு. நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும். தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன், வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது. கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத. நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு. அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத.