எண்பதுகளின் துவக்கத்தில் என்றோ ஒருநாள், கடற்கரைக் கவியரங்கத்தில் சுரதா சொன்னார், ‘பாடல் தொகுதி போடும்படி மருதகாசியிடம் சொல்லியிருக்கிறேன்’. மருதகாசியின் திரைப்பாடல் தொகுதி வெளிவந்ததா என்பதை நானறியேன். கண்ணதாசன், மு.மேத்தா இவர்கள் இருவரின் திரைப்பாடல் தொகுதிகள் முன்பே என்னிடம் உண்டு. கடந்த இரண்டு மாதங்களுக்குள் வாலியின் தொகுதியும் வைரமுத்துவின் தொகுதியும் வாங்கியிருக்கிறேன். நான்கு திரைக் கவிஞர்களின் தொகுதிகள் புத்தக அலமாரியை அலங்கரிக்கின்றன. திருவல்லிக்கேணி வளர்ப்பு அறிமுகம் செய்துவைத்த எம்.ஜி.ஆர். பாடல்களில் துவங்கி, வாரிசுகள் எனக்கு அறிமுகம் செய்யும் பூக்கள் பூக்கும் தருணம் (மதராசபட்டினம்) வரையில் இன்னமும் திரைப் பாடல் ரசனை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வளகுடாவிற்கு வேலைக்காகப் புறப்படுவதற்கு முன்பு வரையில் படத்தின் இயக்குநர் பெயர் தெரியவில்லையென்றாலும், பாடலாசிரியரின் பெயர் எனக்குத் தெரிந்திருக்கும்.
சிகப்பு ரோஜாக்களில் மின்மினிக்கு கண்ணில் ஒரு எழுதியது கண்ணதாசனா? வாலியா? நினைவோ ஒரு பறவை எழுதியது கண்ணதாசனா? வாலியா?
புதிய வார்ப்புகளில் இதயம் போகுதே எழுதியது யார்?
யார் இந்த T.ராஜேந்தர்?
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான், இதனை எழுதிய வல்லபன் யார்?
அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிக்கு நடுவராக வந்த வைரமுத்துதான் ’பொன் மாலைப் பொழுது’ எழுதியிருக்கிறாரா?
வா வா நதியலையே! ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா! நா.காமராசனும் எம்.ஜி.ஆர் என்று வரும்போது கர்நாடக நீரரசியலைச் சொல்கிறாரா?
ஆயிரம் நிலவே வாவின் புலமைப்பித்தன் கட்சிக் கொறடா. கவிஞர்களுக்கான அரசியல் அங்கீகாரத்தில் கண்ணதாசனையடுத்து இன்னொருவரும் வந்துவிட்டாரா?
அவள் அப்படித்தானுக்கும், வாழ்வே மாயத்துக்கும் இடையிலும் பிறகும் கங்கை அமரன் ஏன் முத்திரைப் பாடல்களை எழுதவில்லை?
நானாகக் கேட்டுக்கொண்ட கேள்விகள். அனைத்தும் திரையிசை தொடர்பானவையே.
உருது நண்பர்களுக்கு ஐஸ்ஹவுஸ் ஃபிர்தௌஸ் ஹோட்டல் ஜூக் பாக்ஸில் புலமைப்பித்தனின் ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’யை (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) 25 காசுகள் கொடுத்துப் போட்டு கேட்கவைத்தது.
சிப்பியிருக்குது முத்துமிருக்குது வீட்டிற்கு வருவதற்குள் கட்டளை வந்ததும் கற்பனை வந்தது என்றானது.
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் - தருவதா பெறுவதா தன்னாலே வருவதா என்றானது.
பாட்டு பாட்டு பாட்டுதான், பாட்டன்றி வேறில்லை. விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பை கேட்கத் துவங்கியது முதல் அனைத்தும் பாட்டுதான். பட்டினப்பாக்கம் மீனவர் காலனியில் இரவில் மணற்பரப்பில் விவித பாரதி சுமந்து வந்த ‘பச்சைக்கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ’வின் சுகம் இன்னமும் காதில் இருக்கிறது. அதே விவித பாரதியில் எந்த இசையும் இல்லாமல் இளையராஜா பாடிக் காட்டிய மச்சானைப் பாத்தீங்களாவும் நினைக்கும் பொழுதெல்லாம் ஒலிக்கும் வரிகளாக செவியில் தங்கியிருக்கிறது.
திரைக்கவிஞனாகும் தகுதி எனக்கு அப்போது இருந்ததோ இல்லையோ நானறியேன், ஆனால், ஆசைப்பட்டேன். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில், ஒரே நாளில் கண்ணதாசனாகும் எண்ணத்தோடு ஸ்டுடியோ வாசல்களில் காத்துக்கிடக்கும் கவிஞர்களைப்பற்றிப் படித்தபோது வருந்தினேன், அருமைராசனின் வெற்றிக்கு மகிழ்ந்தேன்.
திரைக் கவிஞர்கள் என்னுடைய ஆதர்ஷ புருஷர்கள், அப்போது.
எல்லாமும் 1983 வரையில்தான். வளைகுடாவிற்கு வாழ்க்கைப்பட்ட பின் பாடல்கள் கேட்கவும் ரசிக்கவும் மட்டுமே என்பதுதான் நிலை. சென்னையில் தமிழ்த் திரைப் பாடல்களை உண்டு உறங்கி விழித்துபோல் சவூதி அரேபியாவில் இருக்க இயலவில்லை. உறவுகளுடனான தொடர்பு கடிதத்தில்தான் என்றானதுபோல், தமிழ்த் திரைப்பாடலுடனான தொடர்பு வீடியோவுடன்தான் என்றானது. யார் எந்தப்பாடலை எழுதியது என்னும் விவரங்களை அறிவிக்க விவித பாரதி சவூதி அரேபியாவில் கிடையாது. இன்றைக்கு இருப்பதைப்போல் சாட்டிலைட் சேனல்களும் இணையமும் எண்பத்து மூன்றில் கிடையாது. தமிழ்த் திரைப்பாடல்களுடனான தொடர்புக்கு உள்ளூர் நிறுவனங்கள் வெளியிடும் இசைமழை கேசட்டுகள்தான் என்றானது.
பாடலாசிரியர் பெயர் தெரியாத இசை மழையில் நான் அவ்வளவாக நனையவில்லை.
கவனம் வேறு பக்கம் திரும்பியது.
நண்பர் இர்ஷாத் அலி அறிமுகம் செய்த கஜல்களில் கொஞ்சம் நீந்தினேன். எஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட இந்தித் திரைப் பாடல் வீடியோ தொகுப்புகள், ஏற்கெனவே திருவல்லிக்கேணி அறிமுகம் செய்துவைத்திருந்த இந்தித் திரைப்பாடல் ரசனைக்கு பட்டை தீட்டின. பினாக்கா கீத் மாலாவில் குரலாக அறிமுகமாகியிருந்த கிஷோர் குமார், ராஜேஷ் கன்னாவில் தெரிந்தார். நாகூர் ஹனீபா துனியாகே ரக்வாலேயில் அறிமுகப்படுத்திருந்த ரஃபி சாஹேப், பாரத் பூஷனில் தெரிந்தார்.
ப்ரேம் கஹானி மே ஏக் லடுக்கா ஹோத்தா ஹை, துனியா மே லோகோங்கோ என ஆடிய ராஜேஷ்கன்னா மும்தாஜ் வகையறா பாடல்களை சலிக்கப் பார்த்தேன்.
ருக் ஸே ஸரா நகாப் உட்டாதோ மேரி ஹுசூரில் ஈர்த்த மாலா சின்ஹாவின் பாடல்களாகத் தேடி ஹரியாளி அவுர் ராஸ்த்தா வரையில் இரவு முழுக்க விழித்துப் பார்த்தேன்.
தாஜ் மஹாலின் ஜோ வாதா கியா வோ நிபானா படேகாவும் மொஹலே ஆஸத்தின் ப்யார் கியாதோ டர்னா கியாவும் எனது தேசியகீதமோ என்று நினைக்குமளவிற்குப் பார்த்தேன்.
சாவன் கா மஹினா - சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து ஒப்பீடுகள் மனதில் ஓடத் துவங்கின.
நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான் நான் நானும் - துனியா மே லோகோங்க்கோவும் மாறி மாறி மனக்கண்ணில் ஓடின.
இந்திப் பாடல்களை அறிமுகப்படுத்திய இர்ஷாதே வியக்குமளவிற்கு இந்திப்பாடல்களின் புள்ளி விவரங்கள் மனதில் பதிந்து போயின.
இப்போது வைரமுத்துவின் 1000 பாடல்களைக் கைகளில் எடுத்து முன்னுரையைப் படித்ததும் ஆனந்தவிகடனில் வாலியைப் போல் எனது இந்த நினைவு நாடாக்கள் ஓடுவதை நிறுத்த இயலவில்லை.
திரைப்பாடல்களில் ஆர்வமிருக்கும் அனைவருக்கும் ஆயிரம் பாடல்களின் முன்னுரையான கவிப்பேரரசின் 1980 முதல் 2010 வரையைக் கட்டாயப் பாடமாகப் பரிந்துரைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. 17ம் பக்கம் முதல் 31ம் பக்கம் வரை கவிப்பேரரசு முன்னுரை எழுதவில்லை, தமிழ்த் திரையிசைப் பாடல்களின் வரலாற்றை பதினைந்து பக்கங்களில் சுருக்கி எழுதியிருக்கிறார். அவருடைய பாணி உரைநடையில் மாற்றுக் கருத்து இருந்த போதிலும் உள்ளடக்கத்தில் ஒன்றிரண்டு இடங்கள் தவிர மற்றெங்கும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
நேற்று வாங்கி வந்த நேரம் முதல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரையில் எங்கள் வீட்டில் அனைவராலும் புரட்டப்படும் பக்கங்களாக ஆயிரம் பாடல்கள் விரிகின்றது. இது எழுதுனது வைரமுத்துவா? அப்ப அது எழுதுனது வைரமுத்து இல்லியா? இளைய தலைமுறைக்கு இந்தக் கேள்வி இருக்கிறது. தத்துவப் பாடல்களை வாலி எழுதியிருந்தாலும் கண்ணதாசன் எழுதியதோ என்னும் ஐயப்பாடு ஒரு தலைமுறையினருக்கு இருந்ததைப் போல, வசீக்ரமான தமிழில் எழுதப்பட்டிருந்தால் அது வைரமுத்து எழுதியதோ என்னும் ஐயப்பாடு என்னைச் சுற்றியிருக்கும் இரண்டாம் தலைமுறைக்கு வந்திருப்பதைக் காண்கிறேன்.
நா.மு. முத்தத்தால் செய்த வன்முறையையும், யுகபாரதி வட்டம் பார்த்ததையும், பா.விஜய் போராடிய போர்க்களமும், பழனி பாரதி உள்ளத்தை அள்ளித் தந்ததையெல்லாமும் பரவலாக எல்லோரும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சினேகனின் கத்தாழைக் கண் குத்தியதும் உலகநாதனின் வாழை மீன் விலாங்கு மீன் கல்யாணமும் அனைவருக்கும் தெரியும். திரையிசையில் ஊறியோருக்கு, அவதானிப்போர்க்கு பா.விஜயையும், நா.முத்துக்குமாரையும், பழனிபாரதியையும், யுகபாரதியையும், கபிலனையும், சினேகனையும் இன்னும் பலரையும் அவர்களின் கையொப்ப வரிகளைக் கண்டுபிடித்து அடையாளங் காண இயலும், ஆனால், மேம்போக்காக திரையிசைப் பாடல்களைக் கேட்கும் மற்றொரு கூட்டத்துக்கு வசீகர வரிகளென்றால் முதலில் நினைவுக்கு வருவது வைரமுத்துதான். கவிப்பேரரசின் இந்த ஆளுமையை எண்ணி வியக்கிறேன்.
நீண்ட நெடுந்தொடராகச் சென்றுகொண்டிருக்கும் பாபநாசம் சிவன், மருதகாசி, உடுமலை நாராயணக் கவி, கா.மு.ஷெரீப், கலைஞர், மாயவநாதன், ஆத்மநாதன், பட்டுக்கோட்டையார், சுரதா, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், கு.ம.பாலசுப்பிரமணியம், ஆலங்குடி சோமு, , நா.காமராசன், வைரமுத்து, மு.மேத்தா, நா.முத்துக்குமார், யுகபாரதி, பழனிபாரதி, கபிலன், சினேகன், விவேகா, இங்கே இப்போதைக்கு நினைவுக்கு வராத, எனக்குத் தெரியாத கவிஞர் பெருமக்கள் குறித்து இப்போது நினைக்கத் தூண்டியது, வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள்தான்.
பதினைந்து பக்க முன்னுரையில் அனைத்தையும் சொல்ல முடியாதென்பது விளங்கிக்கொள்ளக்கூடியதுதான், இருப்பினும், ஆயிரம் பாடல்கள் கொண்டிருக்கும் கனத்திற்கு கவிப்பேரரசுவின் முன்னுரை குறைவுதான் என்பது எனது கருத்து. இரண்டு மணி நேரம் கால்மாற்றி நின்று யாரேனும் விவாதித்தாலும், ஆயிரம் பாடல்களுக்கு பேரரசுவின் முன்னுரை குறைவு.
எனது பார்வையில் இன்னொரு ஏமாற்றம். விளம்பரத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு முன்னுரையோடு என்று படித்த நினைவு. அந்த முன்னுரை ட்விட்ட்ர் அளவிற்கே இருப்பது ஏமாற்றம். விடை கொடு எங்கள் நாடேவிற்கு எழுதிய அளவிற்கு ஒரு பாராவாவது எல்லாப் பாடல்களுக்கும் இருந்திருக்கலாம். நெஞ்சினிலே செஞ்சினிலேவிற்கும் என்னுயிரே என்னுயிரேவிற்கும் குறட்பா அளவிற்குதான் முன்னுரை. இது ஒருபக்கமென்றால் சில இடங்களில் தம்மாத்தூண்டு முன்னுரையிலும் கலக்கியிருக்கிறார். கலித்தொகை காலம் துவங்கி கணிப்பொறி காலம் வரையில் வீரமில்லாதவனை பெரும்பாலும் பெண்கள் நேசிப்பதில்லை. அக்மார்க் வைரமுத்து உரைநடை.
பொன்மாலைப் பொழுது பாடலின் முன்னுரையை மட்டும் எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு. கொஞ்சம் நீளமானது. அதனைப் படிக்கும்போது மேற்சொன்ன சுஜாதாவின் அருமைராசன் மனதுக்குள் உட்கார்ந்துகொண்டு, மாலை மலர் விரியும் மாய எழிற்சோலை / காலை நினவாக்கும் கனவுத் தொழிற் சாலை என்று எழுதி அநியாயத்திற்கு அழிச்சாட்டியம் செய்கிறான். இந்த முன்னுரையைப் படித்ததால்தானோ என்னவோ மனம் எல்லாப் பாடல்களுக்கும் அப்படி ஓரளவிற்கு நீண்ட முன்னுரையை எதிர்பார்த்து ஏமாந்தது.
பொன்மாலைப்பொழுதில் துவங்கி அரிமா அரிமா வரையில் ஆயிரம் பாடல்களை ஓய்வாக உட்கார்ந்து ஒரு புரட்டு புரட்டினால் முப்பதாண்டு திரைப்பயணம் சென்று வரலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு, நான் இடையில் விட்ட தமிழ்த் திரைப் பாடல்களை படித்துப் பார்த்து இற்றைப்படுத்திக்கொள்ளும் முயற்சியாகவும் ஆயிரம் பாடல்கள் புத்தகம் இருக்கப்போகிறது.
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு (சஹானா சாரல் தூவுதோ)...