உடையார்
உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கதைக்களம்
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தை, குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
கதைப் பின்னணி
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அலற்ப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில், இத்தனை பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.