ததும்பி வழியும் மௌனம்
படைப்பிலக்கிய வாதிகள் கட்டுரை எழுத வரும்போது, மிகுந்த சுவாரஸ்யத்துடன் கட்டுரையை வாசிக்க முடிகிறது. இது மீண்டும் நிருபணமாகிறது இந்தத் தொகுப்பில். பேருந்து பயணமோ, கழிப்பறை வசதிகளோ, நேரம் தாழ்ந்த பயணமோ அவதானித்து ஒரு ஆண் எழுதுவதற்கும், அனுபவித்து உணர்ந்து ஒரு பெண் எழுதுவதற்கும் பெரிய இடைவெளி உண்டு என்பது இக்கட்டுரைகளை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது.
அ.வெண்ணிலா எனும் கவிஞரின் படைப்பு மனம் முழுவீச்சுடன் வெளியாகி உள்ளது இந்தக் கட்டுரைகளில், காய்தல் உவத்தல் இன்றிப் பேசுகிறார். எவர் மீதும் காழ்ப்பின்றிப் பேசுகிறார். எந்தத் தத்துவ முகமூடியும் அணிந்துகொள்ளாமல் உண்மையை நீதியுடன் பேசுகிறார். தீர்க்கமான பார்வையை முன்வைக்கிறார். அவரது பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் அதற்குத் துணையாக நிற்கிறது. பயணங்கள் பயனுள்ளவையாக அமைந்திருக்கின்றன.
- நாஞ்சில் நாடன்