இசை ஆர்வலர் த.சௌந்தர்
புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில் தற்போது இங்கிலாந்தில் மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் சௌந்தர் பிறந்தது இலங்கையின் வடக்கேயான கம்பர்மலை எனும் கிராமம். இவரது குடும்பம் நுண்கலை புலமையாளர்களைக்கொண்ட பாரம்பரியத்தை உடையது. தந்தை வழிப்பேரனார் கோவில் கட்டும் புகழ்பெற்ற சிற்பி. சௌந்தரின் கலைமீதான ஈடுபாட்டின் நதிமூலம் இவர்தான். தந்தையார் தங்கவடிவேல். புகழ்பெற்ற ஆசிரியர், சீனப்பொதுவுடமைக் கட்சி செயற்பாட்டாளர், பாடகர், ஓவியர், விளையாட்டுவீரர், எழுத்தாளர், பேச்சாளர் என பல்துறை ஈடுபாட்டாளர். தாயாரும் நல்ல இசை ரசிகர். இவரது பெரியப்பா குழந்தைவேல் வளமான குரல்வளம்கொண்ட புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர்.
டென்மார்க் நாட்டு நகரத்து நூலகத்தில் குவிந்திருக்கும் பன்னாட்டு இசைத்தட்டுக்கள் பெரும்பாலும் இவர் கைகள் பட்டவையாகி செவிக்கு இன்பமாகின. மேலைத்தேய செவ்வியலிசை, உலக நாட்டுப்புற இசைத்தொகுப்புகள், நவீன இசை வகைகள் என இந்தப் பட்டியல் மிக நீண்டு செல்லும். இளையராஜாவின் காவிய இசைதான், உலக இசையை ரசிக்கும் நிலைக்கு இவரை இட்டுச் சென்றது. அவற்றிலிருக்கும் எளிமை, புதுமை, அதன் கிராமிய வாசம் போன்றவை உலக இசையின் பன்முகத் தன்மைக்கு ஈடுகொடுப்பதாய் உணரவைத்தது என்கிறார் இசையோடு வாழும் த.சௌந்தர்.