பூமணி சிறுகதைகள்
எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள். எளிய மனிதர்களாலான ஓர் உலகம் எப்படிச் சிக்கலானதாக இருக்க முடியும் என்பதை இக்கதைகளின் வழியே ஆராய்கிறார் பூமணி. விவசாயச் சமூகம் பற்றிய பொதுப் புரிதலுக்கப்பால் அதன் நுட்பமான உள்ளடுக்குகளில் பயணம் செய்யும் இக்கதைகள் நவீனத் தமிழ் இலக்கியத்தின் பரப்பை வெகுவாக விரிவுபடுத்துபவை. கலை அனுபவமாக வாசக மனதில் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்குபவை. தன் மனிதர்களிடையே புழக்கத்திலிருக்கும் சொற்களைக்கொண்டு ஒரு கலைஞனால் எந்த அளவுக்கு ஆற்றல்மிக்க பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளைத் தயக்கமின்றி உதாரணமாகச் சொல்லலாம்.