பொய்த் தேவு
க. நா. சுப்ரமண்யம்
---
‘பொய்த்தேவு’ ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே சமயோசிதமும் சாகசத் திறமையும் கொண்டவன். வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் குடி, கூத்தி என்பனவும் சேர்ந்துகொள்கிறது. காலம் அதன் பாதையில் வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நித்திய உண்மை பற்றிய ஓர் ஒளி தென்படுகிறது. சோமு முதலியார் சோமுப் பண்டாரமாகிறார்.
ஒரு காலச் சூழலின் பல்வேறு தளங்களில் பயணப்பட்ட நாவல். இப்பயணத்தினூடாக, ஒரு வளரும் சிற்றூரின் பூகோள அமைப்பு, சமூக அமைப்பு, சாதியப் பிரிவுகள் என அனைத்தும் உயிர்கொண்டிருக்கின்றன. கூடவே காலமும் சமூகமும் வாழ்வும் அடர்த்தியாகப் புனையப்பட்டிருக்கிறது.
- சி. மோகன்
***
‘பொய்த்தேவு’ என்ற தலைப்பு, ஒவ்வொரு கணமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது.
- பிரமிள்
***
சோமுவுக்கு எவ்வளவு குறைவான பேச்சு; அதில் அவர் உருவம் தெரிகிறது, அவர் நினைப்புத் தெரிகிறது, ஏன் அவர் வாழ்வே தெரிகிறது. குறைந்தபட்சம் பேசி அதிகபட்சம் ஒரு பெர்ஸனாலிட்டியாக உருவாகி இருக்கிறார். வேறு எந்த தமிழ் நாவலிலும் இவ்வளவு குறைந்த பேச்சை நான் படித்ததில்லை.
- சி.சு. செல்லப்பா
***
நான் படித்த சிறந்த நாவல்களுள் பொய்த்தேவும் ஒன்று. வாழ்க்கையைப் பற்றிய மலைப்பும், எனக்கான தெய்வங்கள் என்னென்ன என்ற கேள்வியும், ஒரு சிறந்த இலக்கியத்தைப் படித்த திருப்தியும் வழங்குகிறது. மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆவலும் மனதில் ஓடுகின்றது.
- சு.குசேலன், வலைப்பதிவர்