பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
ஆசிரியர் : பழ. அதியமான்
தி சன்டே இந்தியன் - 24.06.2012
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பட்டவர். பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர். காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைத் தொடங்கியவர். இந்தப் பங்களிப்புக்கெல்லாம் சொந்தக்காரரான டாக்டர் வரதராஜூலு நாயுடுவின் வாழ்க்கை வரலாறை ஆய்வு செய்து எழுதியுள்ளார் பழ. அதியமான். பெரியாரின் நண்பராக விளங்கிய தேசியவாதியான வரதராஜூலு நாயுடுவின் வாழ்க்கை 1950க்கும் முந்தைய தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சமூகப் பத்திரிகை வரலாற்றுடன் ஒட்டிப் பிணைந்ததாக உள்ளது. ராஜாஜியையும் பெரியாரையும் பொதுவாழ்க்கைக்கு அழைத்துவந்தவர். மதுரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு, குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்களிப்புச் செலுத்தியுள்ளார். மக்கள் செல்வாக்கும் பலமாக இருந்துள்ளது. புலால் உணவை தீவிரமாக ஆதரித்தார். அமைச்சர் பக்தவத்சலம் பேசிய ஒரு கூட்டத்திலேயே, ‘மந்திரி சொல்வதைக் கேட்காதீர்கள்,கறி சாப்பிடுங்கள்’ என்று கூறியிருக்கிறார். சித்த மருத்துவரான இவர் பல தொழில்களைச் செய்து பார்த்தார். இடையில் பல முறை சொந்தக் கட்சியும் நடத்திப் பார்த்திருக்கிறார். காங்கிரசில் இருந்து கருத்து வேறுபாட்டால் இந்து மகாசபைக்குப் போனதும் உண்டு. ஆறு ஆண்டுகள் கழித்து காங்கிரசுக்கே திரும்பி விடுகிறார். நாயுடுவின் வாழ்க்கை அதன் முரண்பாடுகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.