இயற்கை அளித்த வரங்கள் அனைத்துமே மனித குல நன்மைக்குத்தான். அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த கொடை கனி வகைகள். மரங்கள், பூக்கள், பழங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா? இவை இல்லாவிட்டால் உயிரினங்கள் இல்லை. ஆம்! மரம் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்காக ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதகுல ஆரோக்கியத்திற்காக கனிகளை நமக்குத் தருகிறது. இயற்கை தந்த கனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை. ஒவ்வொன்றிலும் அற்புத சக்தி ஒளிந்துள்ளது. சிறிய கனியான நெல்லிக்கனி நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. அற்புத ஆப்பிள் வைட்டமின்களை அள்ளித் தருகிறது. தித்திக்கும் அத்திப்பழம், ரத்தத்தை சுத்திகரித்து பெரிய நோய்களைப் போக்குகிறது. கனிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் - புதையல்கள் போன்றவை. எத்தகைய சித்திகளையும் அள்ளித்தரும் சக்தி கனிகளுக்கு உண்டு. இதனைப் ‘பழம் பெருமை பேசுவோம்’ என்ற தலைப்பில் நூலாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர். கரியமேனி கொண்ட சிறிய நாவல் பழம்தான், சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவல்லது. கந்தக பூமியில் விளையும் முந்திரிப்பழம் நீரிழிவு நோயைப் போக்கும். இதுபோன்ற எத்தனையோ பழங்களின் வரலாற்றையும், அவை உண்பதால் குணமாகும் நோய்களையும், பழங்கள் நமக்குத் தரும் சத்துக்களையும், இலக்கியங்களில் பழங்களின் தொன்மையையும், பழங்களை வைத்து சத்துள்ள உணவு வகைகளை சமைப்பது குறித்தும், பழங்கள் குறித்த பழமொழிகளையும் அடுக்கியுள்ளார் நூலாசிரியர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. ஆனால், ‘பழங்கள் இல்லாத வீடு பாழடைந்த வீடு’ என்பது பழங்களைப் பற்றிய புதுமொழி. பழங்களைப் பற்றி தெரிந்து, நம்மை காத்துக்கொள்ள வாருங்கள்... ‘பழம்’ பெருமை பேசுவோம்.