ஒப்பியல் இலக்கியம்’ என்னும் செறிவான தொடரைத் தமிழுக்குத் தந்தவர் க. கைலாசபதி. அதன் தருக்கரீதியான பொருத்தத்தை இந்நூல் நிறுவுகிறது. ஒப்பியலின் அறிவியல் அடிப்படைகளைத் தெளிவுறுத்தித் தமிழில் இந்த முறையானது போதிய அளவு வளராமைக்கான காரணங்களை முதல் கட்டுரை விவரிக்கிறது. இதை வாயிலாகக் கொண்டு நுழையும் வாசகர் சங்கச் சான்றோர் செய்யுள் தொடங்கிச் சமகாலத் தமிழிலக்கியம் வரை & பரணர் முதல் பாரதி வரை & ஒப்பியலின் ஒளியில் கண்டு தெளிய முடியும். 1960களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அறிவுக்கு விருந்தாகத் திகழ்கின்றன. ஒப்பியலின் தத்துவங்களையும் ஆய்வுச் செயல்முறையையும் அறிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாகும். தமிழ் உயர் கல்வியுலகில் உலகளாவிய மிகச் சில ஒப்பியல் இலக்கிய அறிஞருள் ஒருவராக மதிக்கப் பெறும் கைலாசபதியின் ஆய்வுத் தரங்குன்றாச் சரள நடையை இந்நூலிலும் உணர்ந்து திளைக்கலாம்.