கடைசிக் கோமாளி:
இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன்
வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் நீள் வரைவு கை முனையில் சர்ப்பக்குஞ்சுகளாய் தொங்கும் நாடா அர்த்தமற்ற அசைவுகளால் நெளிகிறது உடல் சன்னதங் கொண்டு...காது நிறைக்கும் கைதட்டல்கள் மகிழ்வோலங்கள்.....
அகண்ட திரைச்சீலையின் பின்னுள் உச்ச நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் மூர்க்கங்கொண்ட சிங்கத்தின் வாயில் தலை நுழைத்துச் சாகசம் புரிபவன்.