எழுத்தாள நண்பரான நா.பார்த்தசாரதி உடனான சுந்தர ராமசாமியின் அனுபவப் பதிவுகள் இந்நூல்.அளவுச்சுருக்கத்தில் சு.ரா.வின் மற்ற ஒன்பது நினைவோடைக் குறிப்புகளிலிருந்து இந்நூல் மாறுபட்டது.
இருவரும் எதிர் எதிர்த் துருவங்களில் இயங்கினாலும் மரியாதைக்குப் பங்கமின்றி இருவரிடையிலும் நட்பு தொடர்ந்த கதையைச் சு.ரா.நேர்த்தியாக விவரித்துள்ளார்.சு.ரா.வின் அப்பா,நா.பா.விடம் கொண்டிருந்த ஈடுபாட்டின் விவரிப்பில் விரிந்து எழும் சித்திரங்கள் அலாதியானவை.
ஒரு நாளைக்கு நான்குமுறை குளியல்,உள்ளங்காலுக்கு மூன்றுமுறை க்ரீம் தடவுவது,ஒருநாளில் பன்முறை உடை மாற்றுவது போன்ற தினசரி நடைமுறைகளிலிருந்துகூட நா.பா.வின் படைப்பு சூட்சுமத்தைப் பிழிந்தெடுத்து விடுகிறது சு.ரா.வின் எழுத்து.வாழ்ந்த அனுபவத்தை எழுதாமல்,எழுதுவதற்காக வாழ்க்கையை நாடும் வித்தியாசமான கலைஞனான நா.பா.வின் தலைகீழ் வாழ்க்கையை எரிச்சலோ கோபமோ கிண்டலோ கேலியோ இல்லாமல் கண்டுணர்த்திச் செல்லும் கலை நுட்பம் நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது.