இன்றைய கிராமத்தில் நவீனத்துவமும்,மரபார்ந்த நம்பிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாக மாறிவருவதை மருக்கை நாவல் பேசுகிறது.கிராமத்தின் அன்றாட செயல்பாடுகளுள் அரசியலும்,சாதியும், பெருங்கடவுள்களும்,கூடவே சிறுதெய்வங்களும் கலந்து கிடைப்பதை சித்தரிக்கிறது.மனித மனங்களில் தேங்கியிருக்கிற நினைவுகளும்,வேதனைகளும்,குறிப்பாக கிராமப் பெண்களின் மனதில் புதையுண்டிருக்கிற துயரத்தை மருக்கை வெளிப்படுத்துகிறது.ஜெயலட்சுமி,செல்வி,ஞானம் ஆகிய மூன்று பெண்களின் வழியாக எளிய உரைநடையில் இந்நாவல் விரிவடைகிறது.இந்த நூற்றாண்டின் கிராமத்தின் சித்திரத்தை துல்லியமாகத் தீட்டுகிறது மருக்கை.மனிதர்களை உயிரோடு புதைத்து தெய்வமாக தோண்டி எடுப்பதுதான் உலகத்தின் மாபெரும் அரசியல்.அந்த அரசியலின் பிறப்பிடமே கிராமம்தான் என்பதை மருக்கை உணர்த்துகிறது.