கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஒரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்போரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்துவம் அடைகிறது.
வெவ்வேறு கலைவடிவங்களையும் அறிவுப்புலங்களையும் தன்னூடே பயன்படுத்துவதால் அவரது நாவல்கள் இயல்பாகவே விரிவும் ஆழமும் கொண்டவையாக இருக்கின்றன. செறிவான கற்பனையினால் புனைவின் சாத்தியங்களை விஸ்தரிக்கும் பாமுக் தன் எழுத்தில் மையப்படுத்தும் மர்மம் வாழ்க்கையினுடையதே. அடையாளத் தேடல் என்னும் அவ்வாறான ஒரு மர்மத்தை புதிர்கள், ரகசியங்கள் மற்றும் குறியீடுகள் நிறைந்த பாதையின் வழியே துலக்கும் ஒரு பிரம்மாண்டமான பயணமே ‘கருப்புப் புத்தகம்’ நாவலில் நிகழ்கிறது.
- குணா கந்தசாமி
ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது மேதைமையை, கலைநயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.<wbr style="color: rgb(28, 30, 33); font-family: Helvetica, Arial, sans-serif;"> கதையின் முடிவில் புதிர் தெள்ளென அவிழ்ந்துவிடுவதில்லை. புரிந்ததைப் போலவும் இருக்கிறது, புரியாததைப் போலவும் இருக்கிறது. இந்தத் திகைப்புத்தான் இந்த நாவலின் மிகப் பெரிய பலம். உண்மையில் என்னதான் ஆனது? எதிரெதிராய் நிலைபெற்றிருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடி களுக்குள் சிறைப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்தும் களங்கமற்ற, குழந்தைத்தனமான குதூகலத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.