'2001இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே ‘கனவுச் சிறை’யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. ‘கனவுச் சிறை’ கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின் சகல தளங்களையும், அதில் உலவிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலுப்பிக்கொண்டிருந்தது. ‘கலிங்கு’ நேரடியாக அரசியலுக்குள் நுழைகிறது. அது கனவு மனிதர்களின், கனவுகளற்ற மனிதர்களினதேபோன்ற அவலங்களைக் கணக்கெடுத்திருக்கிறது.
இலங்கை யுத்தம் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இறுதி யுத்தத்தின்போது மக்கள் அடைந்த அவலங்களைவிட, அதன் பின்னால் அவர்களின் வாழ்வு மீட்சியற்ற விதமாய் சிதைந்துபோயிருப்பதையும், மனிதத்தை கலாச்சாரத்தை சகலதையும்தான் சிதைத்துக்கொண்டிருக்கும் போரின் உபவிளைவுகளையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது நாவல்.'