தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம்.அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம்.அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒன்றுடன் தொடர்புபடுத்தி,ஒவ்வொருவரும் மனதில் பொக்கிஷமாக வைத்திருப்பது இயல்பான ஒன்று.
அப்படி நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் திரைப்பாடல்களை பற்றியும்,அவற்றை உருவாக்கிய இசையமைப்பாளர்கள் மற்றும் பாடிய பாடகர்கள் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.அத்துடன் குறிப்பிட்ட இசையமைப்பாளர் தன் துறையில் அடைந்துள்ள இடத்தின் பிண்ணணி குறித்தும் விளக்குவது கூடுதல் சிறப்பு.
தமிழ்த் திரைப்பாடல்கள் பற்றி மட்டுமல்லாது காலத்தால் மறக்கவியலாத இந்திப் பாடல்கள் மற்றும் இசையமைப்பாளர்கள்,அத்துடன் உலகப் புகழ்பெற்ற இசைமேதை மொஸார்ட் உள்ளிட்டோரைப் பற்றிய அறிமுகமாகவும் இக்கட்டுரைகள் மிளிர்கின்றன.
‘கருந்தேள்’ ராஜேஷ் அவர்களின் தனிப்பட்ட ரசனை அடிப்படையில் எழுதப்பட்டதாக இருந்தாலும்,வாசிப்பவரின் மனதின் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நம்மையும் இந்த இசைச்சூழலில் சேர்த்து விடுவதே இந்த புத்தகத்தின் வெற்றி.