இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது.
அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது.
பா. ராகவனின் ‘இறவான்’, மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலகச் செயல்பாடுகளினூடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த இதில் கையாளப்பட்டிருக்கும் எழுத்து முறை தமிழுக்குப் புதிது.
No product review yet. Be the first to review this product.