கேபிள் சங்கர் என்று அனைவராலும் இணையத்தில் அறியப்பட்ட சங்கர் நாராயணன் ஏற்கனவே 5 புத்தகங்களை எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், சினிமா என்று எழுத்தின் அனைத்து பக்கங்களையும் தொட்டுப் பார்த்தவர். அவரின் “சினிமா வியாபாரம்”- என்ற புத்தகம் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது. ஒரு முன்னணி பத்திரிக்கையாளனைப்போல திரைப்படம் வெளிவரும் முதல் நாளே ஒவ்வொரு படங்களையும் பார்த்து தனது பதிவை இணையத்தில் பகிர்ந்துகொள்பவர். இவரது நேர்மையான விமர்சனத்தைக் கண்டு சில இயக்குநர்களால் இவருக்கு கொலை மிரட்டல் விடும் அளவுக்கு துணிச்சலான விமர்சனத்தை முன் வைப்பவர். இவர் இணையத்தில் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு மற்ற பத்திரிக்கையாளர்கள் தங்களது பத்திரிக்கைக்கு விமர்சனம் எழுதுகிறார்கள் என்றால் அதுதான் இவரது விமர்சனத்தின் நேர்மையும், துணிச்சலும் எனலாம். அந்தவகையில் தமிழ்- தெலுங்கு-இந்தி-ஆங்கிலம் என அனைத்து மொழிப் படங்களையும் சேர்த்து 27 திரைப்படங்களுக்கு இவர் எழுதிய விமர்சனத்தின் தொகுப்பே இந்நூல். நாம் பார்க்கும் சினிமாவில் நம் கண்ணுக்குப் புலப்படாத பக்கங்களை நுணுக்கமாக வெளிப்படுத்துவதே இவரது விமர்சனத்தின் சிறப்பு, அதுவே இந்நுலின் சிறப்பும் எனலாம்.