சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் என்ற புத்தகம், பாடகி சின்மயினுடைய டுவிட்டர் விவகாரத்தை மையப்படுத்தி எழும் விவாதக் குரலாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
விவகாரத்தின் அறிமுகம்
ட்விட்டர் என்கிற சமூக வலை தளத்தில் பாடகி சின்மயி ஐஏஎஸ் படிக்க நினைத்த தனது கனவு சமூகத்தில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாய் நிறைவேறாது போய்விட்டதாக 04 ஜனவரி 2011 அன்று சில ட்விட்டுகளை இடுகிறார். அவரது விசிறிகளில் ஒருவரான ஆர்த்தி உரையாடலில் இணைகிறார். ”தாழ்த்தப்பட்டவர்கள் என்று ’சொல்லப்படுகிறவர்கள்’ என்று எவரும் இல்லை என்று சின்மயி ஆங்கிலத்தில் கூறுகிறார். இந்தச் சொற்கள் சமூக விழிப்புணர்வுள்ள தமிழ் ட்விட்டர்களின் கவனத்தைக்கவரவும் அவர்கள் இவருடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குகின்றனர். இது மிக நீண்ட விவாதமாகவும் இடையிடையே உரசலாகவும் விரிகிறது. விவாதம் கண்ணியமாகவே நடந்தாலும் சின்மயியின் பொது அறிவின் போதாமை, பிராமணீய விழுமியங்கள் மற்றும் அவரது ஜாதீய மனோபாவம் ஆகியவை எல்லோர் பார்வையிலும் படும்படியாக பொதுவெளியில் அம்பலப்படுகின்றன. இது, அவமானத்தையும் தான் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதான எண்ணத்தையும் சின்மயிக்குள் விதைக்கிறது. இந்த விவாதத்தில் பங்குபெற்ற சிலருக்கும் தூர இருந்து கவனித்துக்கொண்டிருந்த முதிர்ச்சியற்ற பல இளம் தமிழ் ட்விட்டர்களிடையேயும் சின்மயி மீதான இளக்காரத்தையும் எகத்தாள மனோபாவத்தையும் எரிச்சலையும் கோபத்தையும் இந்நிகழ்வு உருவாக்குகிறது. சின்மயி இவர்களில் பலரையும் தன் வழியில் தன் ட்விட்டுகளில் குறுக்கிடாதபடி தடை செய்கிறார். தடைசெய்யப்படுவதென்பது அவமானகரமான செயல் என்பதால் தடைசெய்யப்பட்டவர்கள் மனதளவில் சின்மயிக்கு எதிரிகளாகிறார்கள். இது இரு சாராருக்கும் இடையே விரிசலாக உருவாகிறது.
இதே சமயம், இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் கொல்லப்படுவது தமிழக பொது மக்களிடையே கையறுநிலை கொந்தளிப்பை உருவாக்குகிறது. இது தமிழ் ட்விட்டர்களிடையே பிரதிபலிக்கிறது. உலக அளவில் இயங்கும் ட்விட்டரில் அதிகமாக விவாதிக்கப்படும் விஷயமாய் தமிழக மீனவர் பிரச்சனையை ஆக்குவதே மாநில மத்திய அரசுகளின் கவனத்தைக் இந்தப் பிரச்சனை நோக்கிக் குவிப்பதற்கான சிறந்த உத்தி என்கிற எண்ணத்துடன் எழுதப்படும் ட்விட்டுகளின் இறுதியில் #TNFisherman என்கிற TAG இணைக்கப்படுகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 24 ஜனவரி 2011ல் தொடங்கிய சில நாட்களிலேயே ட்விட்டரில் இந்த TAG உலக அளவில் முன் நிலையை நோக்கி முன்னேறத் தொடங்குகிறது. இதனால் உற்சாகமடைந்த தமிழ் ட்விட்டர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இந்த இயக்கத்தில் இணையும்படி பல பிரபலங்களிடம் கேட்கிறார்கள். அது போல சின்மயியிடமும் கேட்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழ் ட்விட்டர்களால் பல முனைகளிலிருந்தும் மடக்கப்பட்ட எரிச்சலில் இருந்த சின்மயி, தமிழ் ட்விட்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இணைய மறுக்கிறார். இது சின்மயிக்கும் பெரும்பான்மையான இளம் தமிழ் ட்விட்டர்களுக்கும் இடையிலான பிளவாக விரிகிறது.
இரு சாராருமே ஜாடைமாடையாய் நக்கலடித்துக் கொள்ளத்தொடங்கி தொடர்கிறது. தன்னைப் பொதுவெளியில் அவமானப்படுத்தும் இந்த கும்பலுக்கு ராஜனே தலைவன் என்கிற எண்ணம் சின்மயியிடம் ஆழமாக வேரூன்றுகிறது. இதற்குப் பிறகு இளம் தமிழ் ட்விட்டர்களுக்கிடையே செல்வாக்கு பெற்ற ராஜனுக்கும் சின்மயிக்கும் இடையிலான தனி நபர் காழ்ப்பாய் மாறுகிறது.
10 மார்ச் 2012ல் மகேஷ் மூர்த்தி என்கிற ஆங்கில பத்திரிகையாளர் ஷேகர் கபூர் தொடங்கி ஐந்து நபர்களை செல்வாக்கு மிகுந்த தனிக் குரல்களாகவும் கேளிக்கையாளர்களாகவும் தேர்வு செய்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையாக வெளியிடுகிறார். அந்த பட்டியலில் நான்காவது நபர் சின்மயி ஐந்தாவது நபர் தமிழ் ட்விட்டரும் பிளாகருமான ராஜன்.
அந்த பட்டியலில் ராஜன் பெயர் எப்படி இடம்பெறப்போயிற்று என 11 மார்ச் 2012 அன்று சின்மயி மகேஷ் மூர்த்தியிடமும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்தவரிடமும் பொதுவெளியில் சண்டைப்போடுகிறார். அவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் சின்மயி ஏற்க மறுக்கவே, ஒரு கட்டத்தில் மகேஷ் மூர்த்தி, உனக்கும் ராஜனுக்கும் இடையில் இருக்கும் சண்டைக்காக என் கணிப்பையெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறிவிடுகிறார்.
மகேஷ் மூர்த்தி - சின்மயி உரையாடலில் சின்மயி அவமானப்பட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜனும் அவரது ஆதரவாளர்களும் இதைத் தமது வெற்றியாய் எண்ணி #AsingapattalChinmayi என்கிற TAG போட்டு கொண்டாடத்தொடங்கினர். தமிழ் ட்விட்டர் களேபர பூமியாகிற்று. ராஜனுக்கோ சின்மயிக்கோ இந்தப் பிரச்சனைக்கோ துளியும் சம்பந்தமே இல்லாதக் கலவரக்காரர்கள் இடையில் புகுந்து இதே இறுதி இணைப்புடன் சின்மயியை மிகவும் கேவலமாக வசைபாடினர். இவையாவும் ராஜனின் கைவேலை என்று நம்பிய சின்மயி, போலீசில் போய் புகார் கொடுத்தார். இதை மகேஷ் மூர்த்தியிடமும் கூறினார். இவையெல்லாம் பொதுவெளியில் எல்லோர் பார்வைக்கும் படும்படியாக நிகழ்ந்தவை.ஆசிரியர் விமலாதித்த மாமல்லன்