குழந்தை இலக்கியம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருந்தாலும் கொண்டாட்டம் இல்லாத,மகிழ்ச்சியளிக்காத,கறாரான ஆசிரியரைப் போன்று,பரீட்சைக்காக மட்டுமே படிக்கிற பாடப்புத்தகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.மலையாள எழுத்தாளர் மாலி எழுதிய அய்யாசாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால் தான் அய்யாச்சாமி தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்.தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கர நாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது.மரத்தில் ஏறினால் ஏறுகிறது.ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது.இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.வாசிப்பதற்கும் மிகவும் சுவாரசியமானவை.