தேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்... இந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை. ஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவில்லை. பண மதிப்பு நீக்கம் காலத்தின் கட்டாயம்; தவிர்க்கமுடியாதது என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால் சில ஆதாரமான கேள்விகளுக்கு அவர்களால் விடையளிக்க முடியவில்லை. அரசு எதிர்பார்த்ததைப் போல் கறுப்புப் பணம் ஒழிந்திருக்கிறதா? பயங்கரவாதச் செயல்கள் குறைந்திருக்கின்றனவா? வரி ஏய்ப்பு இப்போது நடைபெறுவதில்லையா? ரொக்கத்தைக் கைவிட்டுவிட்டு, டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு அனைவரும் மாறுவதுதான் தீர்வா? இன்னொரு தரப்பினரோ, பண மதிப்பு நீக்கம் முழுத் தோல்வி அடைந்துவிட்டது என்கிறார்கள். எனில், ஏன் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள் என்பதற்கு இவர்களிடம் விளக்கமில்லை. சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் அரசியல் சார்பு எடுக்காமல் பண மதிப்பு நீக்கத்தின் நிறை குறைகளையும் சாதக பாதகங்களையும் நடுநிலையோடு அலசி ஆராய்கிறது. அனைவரையும் பாதித்த ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை குறித்து அனைவருக்கும் புரியும் மொழியில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான நூல்.