காந்தி ஒரு மனிதர் தான்,விழைவுகளும்,கனவுகளும் அலைகழிக்கும் மனிதர்,தன்னுடைய லட்சியங்களை,அதன் எல்லைக்கோடுகளை மேலும் மேலும் என உயர்த்தி தொட முனைபவர்,அரிதாக வெற்றியும் பல நேரங்களில் தொல்வியும் அடைந்தவர்,கடவுளோ,தேவ தூதனோ அல்ல. ஆனால் நம்மை விடவும் மேம்பட்ட மனிதர், சில நூற்றாண்டு கால வரலாற்றில் வாழ்ந்த மாமனிதர்களில் ஒருவர், அவர் ரகசியங்கள் ஏதுமற்றவர். தன் தோல்விகளையும் அச்சங்களையும் தன் முயற்சிகளைம் நம்முன்னே அப்பட்டமாக கடைவிரித்தவர். காந்தி அவர் கொண்ட லட்சியங்களால், அதற்கான முயற்சிகளால், அதை அடைய முயன்று தோற்றதினால் நமக்கு நெருக்கமாகிறார். என்னை கேலி செய்து சிரிப்பவர். முடிவுகளை நோக்கி நிர்பந்திப்பவர். செயற்கைக்கோள் துவங்கி கழிவறை வரை எல்லாவற்றையும் பற்றி அவருக்கு சொல்வதற்கு எதாவது உண்டு. ஆகவே இன்றும் என்னுடன் அந்தரங்கமாக உரையாடுபவர். காவேரியா?ஸ்டெர்லைட்டா?கூடங்குளமா?காந்தி என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார்? என் நிலைபாடு என்ன? ஒருக்கால் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை நான் கொண்டிருந்தால் அவரை தர்க்கரீதியாக திருப்திபடுத்தி என் தரப்பிற்கு ஆதரவாக்கும் அளவுக்கு என் தரப்பு வலுவானதா?அப்படியில்லை என்றால் அவர் தரப்பிற்கு நான் மாற வேண்டும். அந்த மனத்திண்மை எனக்கிருக்கிறதா? காந்தி எனக்கொரு உரைக்கல்.
No product review yet. Be the first to review this product.