அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.
சாதி இந்துக்களின் கால்களுக்குக் கீழே நொறுங்கிக்கிடப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று ஒடுக்கப்பட்டவர்களே நம்பியிருந்த காலகட்டம் அது. அம்பேத்கர் தொடுத்த இரண்டாவது யுத்தம் இந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்தது. உணவும், உடையும் அல்ல, தன்மானமும் தார்மீக கோபமும்தான் ஒருவரை உயிர்த்திருக்க வைக்கும் என்று அழுத்தமாகப் புரியவைத்தார் அம்பேத்கர்.
மனுதர்மத்தை நிராகரித்துவிட்டு மனித தர்மத்தை முன்வைத்தார். மதம் அரசியலாக மாறியதை அம்பலப்படுத்தினார். அரசியல் மதமாக மாறியதையும். தான் உருவாக்கிய சட்டத்தால் சமூகம் பயன்பெறாது என்பதை அறிந்ததும் அதனை கொளுத்தி வீசவும் தயாரானார்.
அம்பேத்கரை அவர் எடுத்துக்கொண்ட பிரச்னைகள் மூலம், அவர் முன்வைத்த சமூக ஆய்வுகள் மூலம், அவர் வளர்த்தெடுத்த அரசியல் கோட்பாடுகள் மூலம் தீர்மானிக்கும்போது ஒரு புரட்சியாளராக அவர் நம் கண்முன் விரிகிறார்.
அம்பேத்கருக்கான புதிய தேடல்கள் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில், அம்பேத்கரின் அரசியல், சமூக வாழ்க்கையை அவரது சிந்தனைகள் வாயிலாக துல்லியமாக அறிமுகம் செய்துவைக்கிறார் ஆர். முத்துக்குமார்.