ஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். தன் 21வது வயதில் வெறும் 300 ரூபாயே சம்பளமாகப் பெற்றவர். தன்னால் வானத்திலுள்ள நட்சத்திரங்களையே வளைத்துப் போட முடியும் என்கிறபோது ஏன் தரையிலுள்ள கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டு இருக்கும் வேலையைச் செய்யவேண்டும் என்று நினைத்தவர். தன் திறமையால் 75,000 கோடி ரூபாய்க்கு அதிபதியானவர் ரிலையன்ஸ் அம்பானி. பின்புலம் இல்லை. வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் பிரம்மாண்டமான கனவுகளைக் கண்டவர். அந்தக் கனவுகள் அத்தனையையும் நனவாக்கியவர் ரிலையன்ஸ் அம்பானி. எப்படிச் சாதிப்பது? எதைச் சாதிப்பது? யாரைப் பின்பற்றுவது? எவரை முன் மாதிரியாகக் கொள்வது என்று தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு... தொழில் முனைவோருக்கு வழிகாட்டி அம்பானி பற்றிய இந்த நூல்.