அமைப்பியம் (பலபேருடைய வழக்கில் ‘அமைப்பியல்’) என்பது, சமூகவியல், மானிடவியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பல துறைகளில் கையாளப்படும் திட்டவட்டமான முறைசார்ந்த அணுகுமுறை எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். அமைப்பியத்திற்கு அடிப்படையாக அமைந்தது, ஸ்விஸ் நாட்டு மொழியியல் அறிஞரான ஃபெர்டினாண்ட் டி சசூர் எழுதிய பொதுமொழியியல் பற்றிய நூல் (1916) என்பர். ஆனால் அமைப்பியம் (ஸ்ட்ரக்சுரலிசம்) என்ற சொல்லை உருவாக்கியவர் ரோமன் யாகப்சன்.
சசூர், தமது நூலில், குறித்தல் செய்கை பற்றிய ஓர் அறிவியல் ரீதியான கொள்கையை முன்வைக்க முயன்றார். குறிகள் வாயிலாக நிகழும் குறித்தல் செய்கை பற்றிய அறிவியலுக்குக் குறியியல் (செமியாடிக்ஸ்) என்று பெயரிட்டார். அவருடைய கருத்துப்படி மொழி என்பது குறித்த உறவுகளின் ஓர் அமைப்பொழுங்கு. இவ்வுறவுகளால்தான் அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சொல், தானே ஒரு பொருளைக் ‘குறிப்பதில் லை’. மாறாகப் பிற சொற்களோடு அதற்குள்ள உறவினால் அர்த்தம் உருவாகிறது.
மொழியின் பொதுவான அமைப்பு ‘லாங்’ எனப்படும். இது மொழியின் அமைப்புக்கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இதற்கு மாறாக இருப்பது, ‘பரோல்’ எனப்படும் தனிவெளியீடு (தனிப்பேச்சு). இதில் மொழியமைப்பின் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோலவே குறியின் (சொல்லின்) அமைப்பிலும், குறிப்பான்-குறிப்பீடு என்னும் இரு தன்மை களைக் காண இயலும். குறிப்பதற்கெனக் கொள்ளப்படும் பொருள் பற்றிய நினைவுத் தோற்றத்தைக் குறிப்பீடு (சிக்னிஃபைடு) எனலாம். அதை ஒலிகளால் அல்லது பிற முறைகளால் குறிக்கும் விதத்தைக் குறிப்பான் (சிக்னிஃபையர்) எனலாம். இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு தன்னிச்சையானது, வரையறுக்கப்படாதது.