பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். "அள்ள அள்ளப் பணம்" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட.
இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டு, பெட்டியில் பூட்டி வைத்துவிடுவது. தென்னம்பிள்ளை மாதிரி ஆண்டுகள் ஆனாலும், கடைசியில் காய்க்கும்போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனால் தினசரி பங்கு வர்த்தகத்தில் புகுந்து விளையாடும் பலரும் ஈடுபடுவது "இண்ட்ரா டே டிரேடிங்" எனப்படும் தினசரி வர்த்தகத்தில். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். தீ, நெருப்பு கொஞ்சம் கவனமாக இல்லை என்றால் பொசுக்கிவிடும்.
ஆனால் அந்த நெருப்புதானே விட்டில் பூச்சிகளை விரும்பி அழைக்கிறது. விட்டில் பூச்சிகள் போல பொசுங்கிவிடாமல், கனமான ஆமை ஓட்டை உங்களுக்கு அளிக்கிறது இந்தப் புத்தகம். டிரேடிங்கில் வெல்ல நிறைய கணக்கு தெரிந்திருக்க வேண்டும். கேண்டில்கள், வேவ்கள் போன்ற வரைபடங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தக் கணக்குகளைப் புரிந்துகொள்ள முடியும். சோம.வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைபிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.