Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆதிரை ( சயந்தன்)

(0)
aathirai (sayanthan)
Price: 580.00

Weight
900.00 gms

 

புலிகள் கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார்களா? அவர்கள் மக்களை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு போரில் ஈடுபட்டார்களா? அவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருந்தார்களா? இந்திய ராணுவம் ஈழத்துப் பெண்களை கற்பழித்ததா? சிங்கள ராணுவம் மக்களை ஒரே இடத்தில் சேரவைத்து கொன்று குவித்ததா? சரணடைந்தவர்களை கொடூரமாக கொலை செய்தார்களா? வதை முகாம்களை உருவாக்கினார்களா? ஈழத்தில் பல்வேறு குழுக்களை புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவமும் இந்தியாவும் உருவாக்கக் காரணமென்ன? யாழ்ப்பாணம் ஏன் போரின் பிடியில் அதிகமாக சிக்கவில்லை? மலையகத் தமிழர்கள் வன்னி மக்களின் பங்களிப்பென்ன? VHP போன்ற அமைப்புகள் எப்போது உள்ளே புகுந்து வேலைகளைச் செய்தார்கள்? மக்கள் புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாறி மாறி வரும் மனநிலைகளின் பின்னணி என்ன? வெளிநாட்டு வாழ் ஈழத் தமிழர்களின் உண்மையான பங்களிப்பென்ன? சாதியை புலிகள் எப்படி எதிர்கொண்டார்கள்? பேரழிவின் நுனியில் மக்களை சரணடைய புலிகள் உதவினார்களா? முள்ளிவாய்க்கால் போன்று எத்தனை சம்பவங்கள் நடைபெற்றன? பெண் புலிகள் எப்போது இயக்கத்தில் சேர்ந்தார்கள்? மொசாட் அங்கு என்ன வேலை செய்தது? ராணுவத்தின் குறி பொது மக்கள் மீதா? இயக்கத்தின் மீதா? பேச்சுவார்த்தை போர் நிறுத்த காலங்களில் என்ன நடந்தது? பெரும் சட்டகத்தில் புலிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? மக்கள் தங்கள் வாழ்க்கைப் பாடுகளான வேலை, தொழில், வேளாண்மை, சடங்குகள் , காதல், திருமணங்கள் இவற்றில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பேரழிவின் போது தமிழகம் ஏன் அதை மறைத்தது?
இத்தனை கேள்விகளையும் ஒரே கேள்வியாக கேட்டுக் கொண்டு ஆம் இல்லை என்று பதில் சொல்ல முடியுமா? பெரும் சரித்திரப் பாடம் படிக்க வேண்டி இருக்கிறது. இலங்கையில் நடந்தது நமக்கு நடக்க வெகு நேரம் பிடிக்காது என்று அரசியலின் விளையாட்டைப் வரலாறு வழியாக பார்க்கும் எவருக்கும் தெரியும். காந்திய வேஷமெல்லாம் உயிர்களை காப்பாற்ற முடியவில்லையே. படிக்காமல் புரிந்து கொள்வதாக நடிக்கிறார்கள் நம் மக்கள். இது தான் சிக்கல். ஒட்டு மொத்த சித்திரம் கிடைப்பது தான் இன்றைய தேவை.

ஈழத்துப் படைப்புகள் அரசியல் சிக்கல்களை சொல்வதாகவே இங்கு பரப்பப்பட்டு அவற்றின் தரத்தை குறைக்கும் ஒரு போக்கு எப்போதும் இங்குள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் வெறும் பிரச்சாரம் செய்வார்கள், கலை நுணுக்கத்தோடு எழுத மாட்டார்கள் என்று அடித்துவிடும் ஆட்கள் உண்டு. ஈழத்தில் நடந்த இழப்பைப் பற்றிய அரசியல் படைப்புகள் நிறைய வந்துவிட்டன. அ. முத்துலிங்கம் மாதிரி முழுவதும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் வந்துள்ளன. சயந்தனின் ஆதிரை நாவலில் மலையகத் தமிழகம் துவங்கி வன்னிக் காட்டில் தனிக்கல்லடியில் இருந்து பேச்சித் தோட்டம் வந்தடையும் (அகதிகளாகத் தான்) கதை மாந்தர்களின் வாழ்க்கையை உயிர்ப்பாக சித்தரித்துள்ளார். இயக்கங்கள் அரசியல் எல்லாம் திரைக்குப் பின்னால் இருத்தி மனிதனின் வாழும் விளைவை இச்சையை காட்டும் பெரும் காப்பிய இலக்கணக் கட்டமைப்பு.

தமிழ் மரபில் தாய்மை வழியாக கதை சொல்லப்படுவது என்பது தான் அதன் தனித்துவம். தாய்மையைக் கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை விளக்க பெரிய திரைச்சீலை ஒன்றில் வண்ணம் தீட்டியுள்ளார். துயர் படும் மக்களின் வாழ்க்கையில் காளியே என்று தான் ஏதிலிகள் கூப்பிட முடியும். வாங்க காந்தியே என்று கூப்பிட்டிருக்க வேண்டும் என்று சொல்கிற அறிவிலித் தனத்தை அவ்வப்போது காண்கிற போது வேதனையாக இருக்கும். நெருப்பில் தன் கண்ணுக்கு குழந்தையை முன்னால் பலி கொடுத்த ஒரு தாய் மனப் பிறழ்வை அடைகிறாள். வேறு குழந்தைகளை காணும் போது "ஒடி வாங்க, தீ கடலைப் போல கலைச்சுக் கொண்டு வருது " என்று அணைக்க ஓடுகிறாள். கொடுங் கனவையும் பெரும் துயரையும் நம்பிக்கை கொண்டு மீண்டு வர நினைக்கும் மக்களின் வாழ்க்கை பற்றிய நீண்டதொரு பயணம். மூன்று காதல்கள் மூன்று பயணங்கள் என்று சொல்லலாம். மீண்டும் மீண்டும் தர்க்கத்தால் வாழ்க்கையை அளக்க நினைக்கும் அறிவு வேட்கையில் இருந்து விலகி இதயத்தின் வேட்கையான வாழ்க்கையைத் தேடும் ஒரு நாவல். எத்தனை இழப்புகளுக்குள்ளும் உயிர்கள் ஒண்டிக் கொண்டு இச்சைகளை வளர்த்துக் கொண்டு கைகளைப் பற்றிக் கொண்டு செல்லும் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. ஒவ்வொரு தமிழரும் வாசிக்கத் தவற விடக் கூடாத புதினம். காரணம் நாம் நம்மை சோதித்துக் கொள்ள நிறைய இருக்கிறது.      

-இளங்கோ கல்லணை

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.