மனிதர்களின் பயணங்களுக்கு பின்னால் வெறும் கொண்டாட்ட மனநிலை மட்டுமே இருப்பதில்லை.திகைத்து நிற்கும் சாகசங்களும் தேவைப்படடுகின்றன.நடைபயணங்களானாலும் சரி,வாகனப் பயணங்களானாலும் சரி அதன் முடிவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கவே செய்யும்.காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பி விடும் குறும் பயணங்களுக்குப் பின்னால்கூட அசை போடுவதற்குப் பல தருணங்கள் கிடைப்பதுண்டு.ஆனால் திரும்பத் திரும்பச் செல்லும் பாதைகளில் பயணம் செல்ல நேர்பவர்களுக்கு வாகனங்கள் அச்சமூட்டுவனவாக மாறிப்போய் விடுவதுமுண்டு.நீண்ட பயணங்களுக்குப் பின் கிடைக்கும் ஓய்வும் தூக்கமும் பயணங்களை அசப்போடுவதற்கான வாய்ப்புகளாகிவிடும் சாத்தியங்கள் கொண்டவை.அதிலும் 20 மணிநேர விமானப் பயணம் செய்து 20 மாதங்கள் வாழ்ந்த நாட்டைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் சொல்லி விடவும் முடியாது;அவசியமும் இல்லை.