வெள்ளாட்டுப் பாலும் உப்புக் கண்டமும்
ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். பெருமாள்முருகனின் புதிய நாவலான 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' படித்து முடித்தபோது.
ஒரு கிழவன், கிழவி, பூனாச்சி என்கிற வெள்ளாடு ஆகிய பிரதான கதாப்பாத்திரங்கள் வழியே, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாக செயல்படுபவர்களின் அரசியலை அதிகார மமதையை அழகாக ஆழமாகப் பேசிச் செல்கிறார் பெருமாள்முருகன்.
பூனாச்சி என்கிற வெள்ளாட்டுக்குப் பெண்பால் குறிப்போடு கதை நகர்ந்தாலும் - அடையாளக் குழப்பங்களை மிக எளிமையாகக் கையாண்டு - எந்த வகையிலும் தன்மேல் படிந்துவிடாதபடி ஆசிரியர் தற்காத்துக் கொள்ளுவதிலிருந்தே நம்மால் நாம் வாழும் சமூகத்தின் கேடுகாலத்தை உணர முடிகிறது.
படைப்பாளிகள் சுதந்திரமற்று ஒர் இருண்ட காலத்தில் வாழ்வதை இந்நாவல் எனக்கு அதிர்ச்சியோடு புரிய வைக்கிறது. எளிய மக்களின் சுதந்திர வாழ்வு என்பது சாத்தியம்தானா?