வீட்டுக்காக நான் உழைத்தபோது எப்படி என்னை நான் பொருட்படுத்தவில்லையோ, அப்படியே நாட்டுக்காக என்று உழைக்கும்போது குடும்பத்தை நான்
பொருட்படுத்த முடியாது என்பதை விளங்கியுள்ளேன். ஆனாலும், நினைவுகள் சதா அலைக்கழிக்கின்றன, இப்பொது உன்னால் ஆறுதல் அடைந்திருக்கிறேன்.
ஒரு போராளி மீதம் இருக்கும்வரை கைவிடப்படாதிருப்பது விடுதலை இலட்சியம் மட்டுமல்ல, எங்கள் குடும்பங்களும்தான் என்று உணருகின்றேன்.
இடப்பெயர்வில் சனங்களின் அவலம் என்னால் காணச் சகிக்கவில்லை. தென்மராட்சித் தெருக்களில் கண்கொண்டு பார்க்கமுடியாதிருக்கிறது.
குழந்தைகளும் கர்ப்பிணிகளும் வயோதிபர்களும் என்ன ஆவார்களென்று நினைக்க எங்கோ வலியெழுந்து தலைவிறைக்கிறது.
விலைகொடுக்காது விடுதலை சாத்தியமாகாது என்பதை விளங்கிதான் உள்ளேன். ஆயினும் விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலால் கொடுக்கமுடியாது. கொடுக்ககூடாது. கொடுக்க நேர்ந்தால் நாங்கள் தோற்றுவிடக்கூடும் என் எண்ணுகிறேன்.
மறுபடியும் உன்னைச் சந்திக்கமுடியும் என்று நம்பவில்லை.