கல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர் கோத்தாரி குழு ஆகியவை அளித்த அறிக்கைகள் தேச நிர்மாணம் குறித்த பொறுப்புடன் உருவாக்கப்பட்டன. இவை கல்விப் பரவலில் அரசின் பங்கை வலியுறுத்தின; அருகமைப் பள்ளிகளையும் இலவசக் கல்வியையும் பரிந்துரைத்தன. இந்த நூலில் கல்வியாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், 1986 - 2016 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக் கொண்டு, 1980களின் பிற்பகுதியில் இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்விதம் இந்தியக் கல்விக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கிறார். இதை, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான 'ஒரு துருவ உலகம்', கல்வியை அரசின் பொறுப்பில் செயல்படும் 'மக்கள் சேவை' எனும் நிலையிலிருந்து தனியார்களும் கார்பொரேட்களும் 'இலாபம் ஈட்டும் பண்டம்' என்கிற நிலைக்கு எவ்வாறு தாழ்த்தின என்பதினூடாக உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட்' ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார். அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக, பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சி பெறுவோர் என ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. இதன் மூலம், அரசின் கல்விக்கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்துகொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்.